Monday, 13 January 2020

உனது கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி...

தவம் செய்! தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும்.
நாம் நல்வினைகள் புரிந்திருந்தால்,
நமது தவம் வலுவானதாக இருக்கும்...
தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும்.
எது வலுவானது என்பதை,
களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்...!’’
அய்யன் போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது.
அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது.
போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது.
‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது.
நான் மயங்கமாட்டேன்..


மயங்கமாட்டேன்...’’ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார்.
ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது.
எனவே,
கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன.
அதேசமயம்,
மெதுவாக செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின...
அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது...!
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும்,
சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம்.
ஒருவர், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்;
தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம்.... யாகமும் ஹோமமும் குறைஇல்லாமல் நிறைவேற்றப்பட்டால்,
அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும்.
உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள்.
பற்றற்றவர்கள்
இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக தோன்றும்.
துறவிகளுக்கு எதற்கு அது?
இருந்தும்,
சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம்.
அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம்.

No comments:

Post a Comment